Dienstag, 1. Mai 2012

குறளும் நாங்களும்

குறளும் நாங்களும்
மக்கட் பேறு





இல்லறம் என்பது மனிதனுக்கு மிக இன்றியமையாததாகும். இதன் பயன் நல்ல பிள்ளைகளைப் பெற்று நல்லபடி வளர்த்து ஆளாக்கிவிடுவதாகும். இந்த அதிகாரம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள தொடர்பையும் கடமைகளையும் நன்கு விளக்குகின்றது.

திருமணமானதும் பிள்ளைகள் பெறுவதும் உறவுகளுடன்; கொண்டாடி மகிழ்வதும் பிள்ளைகள்மீது மிகுந்த அன்பு காட்டுவதும் கேட்பதை  எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் எல்லா வீடுகளிலும் நடக்கும் சாதாரண விடயமாகும். ஆனால் பிள்ளையைப் பெற்றால் எப்படி இருக்கவேண்டும் என்று வள்ளுவர் மிக அழகாக விளக்குகின்றார்.

1

மிக உயர்ந்த செல்வம்.

மனிதன் பணம், நிலம், வீடு என்று சொத்துக்களை மிகவும் கஸ்ரப்பட்டுச் சேர்க்கின்றான். இவற்றையெல்லாம் விட மிக உயர்ந்த செல்வம் பிள்ளைகளே என்று திருவள்ளுவர், குறளில் மிக உயர்வாகக் கூறுகின்றார்.

2

துன்பங்கள் வராது.

பிள்ளைகளை எல்லோரும் வடிவாக வளர்க்கின்றார்கள்; ஆசையாக, அன்பாக வளர்கின்றார்கள்; ஆனால் நல்ல பண்புடைய பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு என்றுமே துன்பங்கள் வரமாட்டாது.



3

நற்பண்பு என்பது இருக்கவேண்டும்.

நல்ல பண்பு என்பது பிள்ளைகளுக்கு இருக்கவேண்டும். பிறருடன் அன்பாக, பணிவாகப் பழகவேண்டும். ஆபத்து வேளையில் உதவி செய்து பிறர் துன்பம் போக்கி மகிழவேண்டும். மனம் நோகும்படி நடக்காமல் நல்ல அன்பான வார்த்தைகளால் பதில் கூறி அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றக்கூடியதாகச் செயல்கள் செய்ய வேண்டும். இப்படியான பண்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் நெருங்காது. எத்தனை பிறவி வந்தாலும் கூட துன்பங்கள் வராது. இவ்வாறு வள்ளுவர் கூறியதன் காரணம் மனிதர்களுக்கு நற்பண்பு என்பது இருக்கவேண்டும். அது உலகில் வாழும் உயிர்களைக் காக்கவும் மகிழ்ச்சிப்படுத்தவும் மிக இன்றியமையாதது என்பதானால் ஆகும்.

4

இயந்திரவாழ்க்கை

இந்தக்காலம் மிகவும் சுறுசுறுப்பானதாகும். ஓடியோடி உழைக்கவேண்டும். கணவனும் மனைவியும் உழைத்தால் வாழ்க்கையை வளமாக நடத்தலாம் என்று வேலைக்குப் போகின்றார்கள். ஓய்வின்றி உழைக்கின்றார்கள். பிள்ளைகளுடன் அமைதியாக இருந்து அன்பைப் பகிர்ந்து கொள்ள நேரம் இருப்பதில்லை... இயந்திர வாழ்க்கை. பிள்ளைகளுடன் ஒட்டி உறவாட, அவர்களின் செயல்களைக் கண்டு ஆனந்தப்பட முடிவதில்லை. இது பிள்ளைகளின் மனதில் வெறுமை ஏற்பட இடமளிகின்றது. இது நல்லதல்ல.


5

பாசம், பண்பு என்பவற்றை வளர்க்க வேண்டும்.

பிள்ளைகளுடன் பெற்றோர் நிறைந்த நேரங்களை களிக்கவேண்டும். அவர்களைச் சுதந்திரமாக விளையாடவிட்டு, தேவையான போது பாராட்டி மகிழவைத்து அவர்கள் உள்ளத்தில் அன்பு, பாசம், பண்பு என்பவற்றைப் படிப்படியாக ஊட்டி வளர்க்க வேண்டும்.


6

இடைவெளி ஏற்படச் சந்தர்ப்பங்கள் நிறைய வரலாம்.

இது வெளிநாடு. மிக வேறுபட்ட சூழ்நிலை. காலநிலை மட்டுமல்ல கலாச்சாரம், பழக்கவழக்கம், வளர்ப்புமுறை எல்லாவற்றிலும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன.
நாங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தாலும் இடைவெளி ஏற்படச் சந்தர்ப்பங்கள் நிறைய வரலாம்.
         
ஜேர்மனில் பிள்ளைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பிள்ளைகள் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றார்கள். எல்லா வசதிகளும் இருக்கின்றன. கண்டிப்புகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

7

சொல்லி மட்டுமே பிள்ளைகளை வளர்க்க வேண்டியுள்ளது.

'அடியாத பிள்ளை படியாது.' என்று சொல்வார்கள். இது அனுபவ முதிர்ச்சியால் பெரியோரால் கூறப்பட்டது. அடித்துப் பயப்படுத்தி பண்பையும் அறிவையும் வளர்க்கும் முறை இன்று பொருந்தாமல் போய்விட்டது. சொல்லி  மட்டுமே பிள்ளைகளை வளர்க்க வேண்டியுள்ளது. அதுவும் பெற்றோர் அன்பு மிகுதியால் பிள்ளைகளைகளின் தவறுகளைக் கண்டிப்பதும் ஏசித் திருத்துவதும் குறைந்து வருகின்றது. பிள்ளைகளின் விருப்பமே எல்லாம் என்ற நிலை உருவாகி வருகின்றது.

8

எப்படியும் வாழலாம்.

அனுபவக் கருத்துக்கள், முதியோரின் பொன்மொழிகள் இவை யாவும் ஒருபக்கம் தள்ளிவைக்கப்பட்டு, கருத்தில் எடுபடாமல் வாழும்நிலை வளர்கின்றது. இன்றைய சூழ்நிலை எப்படியும் வாழலாம் என்றுள்ளது.

9

வாய்விட்டு வாழ்த்தாமல் இருக்கமுடிவில்லை.

பிள்ளைகளை வளர்ப்பது பல பெற்றோருக்கு பெரும்பாடு என்றநிலை உருவாகி வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பிள்ளைகளை வளர்த்து, படிப்பித்து, யூனிவசிற்றி முடித்து அறிவுடன் விளங்கும் பிள்ளைகளையும் அவர்கள் பெற்றோரையும் வாய்விட்டு வாழ்த்தாமல் இருக்கமுடிவில்லை. இத்தகைய பெற்றோர் புண்ணியம் செய்தவர்களே.
10

வெளிநாடொன்றுக்கு வருவது எவ்வளவு கஸ்ரம்?

இந்த வெளிநாட்டு வாழ்க்கை எப்படி வந்தது? இது தெரியாத, புரிந்துகொள்ளாத சில பிள்ளைகளுடன் பெற்றோர் நெஞ்சுக்கள் வடிக்கும் கண்ணீரைக் கடவுள்தான் அறிவார்.
வெளிநாடொன்றுக்கு வருவது எவ்வளவு கஸ்ரம் என்பது இங்கு பிறந்து வளர்ந்த பல பிள்ளைகளுக்குத் தெரியாது.


11

எழுத்தில் வடிக்க முடியாத பிரச்சனைகள்.

இந்த நாட்டுக்கு வந்து விசா எடுக்க அரும்பாடுபட்டு, எழுத்தில் வடிக்க முடியாத பிரச்சனைகளைச் சந்தித்து, கவலை, பிரிவு, கண்ணீர்ப் போராட்டம் என்பவற்றின் மத்தியில் கட்டி எழுப்பப்பட்ட இந்த வாழ்க்கையை பிள்ளைகள் அறிந்து, அவர்கள் படித்து முன்னேற முயற்சிக்கவேண்டும்.


12

பிள்ளைகளுடன் போதுமான நேரத்தைக் கழிப்பதில்லை.

இன்று தேவைகள் பெருகிக் கொண்டே போவதால் பல பெற்றோர் வேலை செய்து பணம் சம்பாதிப்பதிலே அதிக நேரத்தைச் செலவிடுகின்றார்கள். தம் பிள்ளைகளுடன் போதுமான நேரத்தைக் கழிக்க வசதிப்படுவதில்லை.


13

போதுமான நேரத்தைப் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துதல், கூடி விளையாடுதல், அவர்கள் சொல்வதைக் கேட்டல், அவர்களுடன் வெளியே சென்று வருதல் போன்ற இன்பத்துக்கு இணையான இன்பம் இந்த உலகில் வேறு இல்லை. இதனைப் பெற்றோர் மனதிற்கொண்டு போதுமான நேரத்தைப் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். இது மிகுந்த பயனைத் தரும். ஆரோக்கியமான பிள்ளைகளால் மட்டும்தான் இந்த நாட்டையும் உலகத்தையும் கட்டியாள முடியும்.


14

அன்பும், பண்பும், ஒழுக்கமும் அறிவும் கொண்ட பிள்ளைகளை ஒவ்வொரு பெற்றோரும் உருவாக்க வேண்டும்.

இயற்கை அழிவுகள், போர்கள் பொருளாதாரப் பிரச்சனைகள் உணவுத் தட்டுப்பாடுகள் வன்முறைகள், தீயசக்திகள் போன்ற பாரிய நெருக்கடிகளிலிருந்து மனிதர்களையும் உலகையும் உயிர்களையும் கட்டிக்காக்கவும் முன்னேற்றவும் அன்பு, பண்பு, ஓழுக்கம், அறிவு கொண்ட பிள்ளைகளை ஒவ்வொரு பெற்றோரும் உருவாக்க வேண்டும். இது இலகுவான காரியம் அல்ல. மிகுந்த பொறுமையும் விடாமுயற்சியும் கடவுளின் அருளும் வேண்டும்.
படித்தவர் சபையில் முதன்மையானவனாகத் தன் மகனை இருக்கச் செய்தலே பெற்றவர் கடமையாகும்.


15

தந்தை தன் மகனுக்கு செய்யும் உதவி.

படித்தவர்கள் நிறைந்த சபையில் துணிவுடன் பதில் சொல்லும் அறிவும் சொன்னதைச் செய்யக்கூடிய ஆற்றலும் உள்ளவனாக உன் பிள்ளையை வளர்த்து விடு. இதுவே ஒரு தந்தை தன் மகனுக்கு செய்யும் பெரிய உதவியாகும் என்பதும் திருவள்ளுவர் வாக்காகும்.

அறிவுள்ள பிள்ளையால் பெற்றவர்களுக்கு மட்டுமன்றி உலகில் வாழும் எல்லோருக்கும் நன்மையும் மகிழ்ச்சியும் உருவாகும்;.


16

தாய் அடையும் மகிழ்ச்சி.

மகன் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான். இதனை அறிவுடையோர் வாயால் தாய் அறிகின்றாள். அப்போ அந்தத் தாய் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவள் தன் மகனைப் பெற்றபோது இருந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அடைகின்றாள்.



17

மகன் தன் பெற்றோருக்குச் செய்யும் பிரதி உபகாரம்.


ஒருமகன் எப்படி இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகின்றார்.
நற்பண்பும் ஒழுக்கமும் உடைய கற்றவர் சபையிலே முதன்மையானவனாக இருக்கும் ஒருவனைப் பார்த்து, இவனைப் பிள்ளையாகப் பெற இவன் பெற்றோர் என்ன பாக்கியம் செய்தார்கள் என்று புகழ்ந்து பாராட்டும் சொல்லே, ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்யும் பிரதி உபகாரமாகும் என்று கூறுகின்றார்.

மக்கட் பேறு என்ற இந்த அதிகாரத்தை வள்ளுவர் மிக அழகாகவும், அறிவுபூர்வமாகவும், மக்களுக்குப் பயன்படும் விதத்திலும் இலகுவான முறையில் கூறியுள்ளார்.

குழந்தைகளே இந்த உலகத்தின் அரும்பெரும் செல்வம். தேடற்கரியதும் வல்லமை படைத்ததும் உலகின் போக்கை நிர்ணயிக்கக்கூடியதுமான சக்தி குழந்தைகளே.

18

பெற்றோரின் தலையாய கடமை.

பிள்ளைகளை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு அதிக இடங்கொடுக்கக் கூடாது. கொடுத்தால் நாட் செல்ல அவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டிவரும். ஆசை, அன்பு, பாசம் இருக்கிறது என்பதற்காகப் பிள்ளையை ஒழுங்காக வளர்க்காமல், கண்டிக்காமல் விடலாகாது.... விட்டால் அவர்களைப் பின்னர் திருத்தி எடுப்பது மிகக் கடினமாகும்.
சரியான பாதையிலே பயணம் செய்தால் நினைத்த இடத்திற்குச் சரியான நேரத்தில் போய்ச் சேரமுடியும்.
இது இயந்திரங்கள் பேசும் தேசம். எதிலும் விரைவு.... நேரத்தோடு மனிதன் ஓடிக்கொண்டிருக்க வேண்டியநிலை. மின்காந்த அலைகள் வீட்டுக்குள்ளும் வெளியேயும் அலை வீசிக்கொண்டு இருக்கின்றன. சுகமாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எல்லோரும் நினைக்கின்றோமே தவிர அதற்குரிய சூழ்நிலைகளை எம்மால் அமைத்துக் கொள்ள முடியவில்லை. உலகத்தில் நோய்களை உண்டாக்கும் காரணிகள் பெருகிக் கொண்டே போகின்றன.
இதனால் குழந்தைகளை வளர்த்தால் மட்டும் போதாது, அவர்களைச் சிறந்த ஒழுக்கத்துடன் உயர்ந்த கல்விகற்று உலகை நல்வழியில் நடத்திச் செல்ல வல்லவர்களாக வளர்ப்பதே பெற்றோரின் தலையாய கடமையாகும்.        






xxxxxxxxxxxxxxx o xxxxxxxxxxxxxxxx  




Keine Kommentare: